Tuesday, January 19, 2010

மழலையின் மரண ஓலம்.

அன்பின் மறுவடிவம்,
கருணையின் மூல ஊற்று,
தியாகத்தின் உறைவிடம்- என
அனைத்துமாய் இருப்பவள் தான்
" அம்மா ".
தெய்வத்தின் மறுபிறவியாய்
தேர்ந்தெடுக்கப்பட்டவள் ..

கருவறை தாய் கொண்ட
காரணத்திலே தான்
கடவுளும் இசைந்தார்- கோவில்
கருவறையில் தான் வசிக்க...

இவையாவும் இயம்பினார்
இறைவன்- என் தாயின்
கருவறையில் நானிருந்தபோது...
ஆவலுடனே காத்திருந்தேன்
நானும்- என் தாயெனும்
தேவதையைக் காண...

ஓர் இனிய நாளில்- அவள்
மலர்முகம் கண்டேன்.
கருணையுள்ள கண்களிலே
கண்ணீர் வெள்ளம்..

காரணம் கேட்டதும்
கண்ணீர் விட்டேன் நானும்..
பெண்ணாகப் பிறந்ததாலே
வேண்டாம் என்றனராம் என்னை...

சாவுக்கு காவு கொடுக்க -நீயும்
சம்மதித்து விட்டாயா அம்மா?
வாரியணைப்பாய் என்றிருந்தேன்,
வாரியிறைக்க முடிவெடுத்தாயே!

புரண்டு படுக்க விடாது - உனைப்
புண்படுத்தியதற்காய் - இப்
புவியில் இடமளிக்க மறுத்தாயோ?

'உன் தேவதை உனைப் பாதுகாப்பாள்
எனைப் போலவே ' - என்றே
கடவுள் சொன்னாரே - நீ
தேவதை இல்லையா அம்மா?
இல்லை,கடவுள் பொய்யுரைத்தாரா?

பெண்ணாய்ப் பிறந்தது பாவமா?
பிண்டமாய் இருக்கும்போதே
அழித்திருக்கலாமே - இன்று
பிள்ளையாய் வடிவெடுத்த பின்
கொல்வது கொடூரமில்லையா?

'அம்மா' என்று - நான் சொல்லி
நீ கேட்க - ஐயோ!
அருகதையற்றுப் போனேனே...
தாய்ப்பால் தர மனமின்றியே
கள்ளிப்பால் தரத் துணிந்தாயோ?

நெற்றியில் முத்தமிட்டு,
தொட்டிலில் என்னையிட்டு
ஆராரோ பாடுவாய் என
மகிழ்ந்தேனே-
நெல்மணி கொடுத்துக்
கொல்லப் போகிறாயே -
கல்மனசு உனக்கா?
இல்லை,கடவுளுக்கா?

அன்பின் வடிவம் தாயென்றால்
உன் அன்பை எங்கே
அடகு வைத்தாய் அம்மா?
அர்ச்சனை மலரென்றே- நான்
அகமகிழ்ந்தேனே - இன்று
உதித்த நாளிலேயே என்னை
உதிரச் சொல்கிறாயே?

குட்டிக்குழந்தை எனக்கொரு
வாய்ப்பளித்துப் பார் அம்மா...
அன்பை மட்டுமே - அள்ளி
அள்ளித் தருவேன் -
உனக்கு மட்டுமல்ல ,
எல்லோருக்கும்...

ஆம் அம்மா!
என்னையும் வாழவிடு
உன்னைப்போலவே...

No comments:

Post a Comment